முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b460

‘‘தமிழர் பிரச்சினையை பலியிடுவதில் சிங்கள இராஜதந்திரம் மீண்டும் ஒருமுறை வெற்றி பெற்றிருக்கின்றது’’
இலங்கை தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையைப் பணயம் வைத்துத்தான் இலங்கை-இந்தியா நாடுகளுக்கிடையிலான அரசியல் உறவு நகர்த்தப்படுகிறது. இந்த அரசியல் நகர்வில் வெள்ளாடுகளாகத் தமிழ் மக்கள் பலி கொடுக்கப்படுகிறார்கள். இந்த வாரம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையைப் பெற்றுக் கொண்டு மீண்டும் ஒரு முறை தமிழர் பிரச்சினையை இந்திய பலியிட்டிருக்கிறது. சிங்கள ராஜதந்திரம் தமிழர் பிரச்சினையைப் பலியிடுவதில் வெற்றி பெற்றிருக்கிறது என கட்டுரையாசிரியர் தி.திபாகரன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். அவர் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் ராஜதந்திர கட்டமைப்பு தென்னாசியாவில் மிக வலுவானதாக உள்ளது. அது எப்போதும் எல்லாச் சந்தர்ப்பத்திலும் எதிரிகளைத் தோற்கடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. எத்தகைய நெருக்கடிகளையும் அதனால் எளிதாகச் சமாளிக்கவல்ல முதிர்ச்சியும் தேர்ச்சியும் கொண்டுள்ளது. இதனை இந்த வாரம் அது மீண்டும் நிரூபித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளி விவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாவின் இலங்கை விஜயமும் அதன் பின்னான அரசியல் நகர்வுகளும் இலங்கை அரசு ""ஓரடி பின்னேயும் ஈரடி முன்னேயும்"" என்னும் தந்திரத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. அண்மைக் காலத்தில் ஏற்பட்ட இலங்கை - சீன -இந்தியாவுக்கு இடையிலான அரசியல் - பொருளியல் நெருக்கடியிலிருந்து இலங்கை தன்னைத் தற்காலிகமாகப் பாதுகாத்துள்ளது. இம்மாதம் 02 திகதி இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியாவின் வெளியுறவு செயலாளரின் பயணத்துடன் கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையம் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு 51 வீதமான பங்குகள் வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அத்தோடு வெளியுறவுச் செயலர் இலங்கைத்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயத்தை மேற்கொண்டு இருந்தார். அதில் ஒரு கட்டம் யாழ். நோக்கிய பயணம் தமிழ்த் தரப்பினரைத் தயார் பண்ணுவதற்கானதாகவும் அமைந்தது. இந்நிகழ்வுகளின் மூலம் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் பற்றி நுணுக்கமாக ஆராய்வது முக்கியமானது. இந்த வருட ஆரம்பத்தில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அதன் போது இலங்கை சார்ந்து இந்தியாவினது அணுகுமுறையாக ""இரட்டை தூண் கொள்கையை"" முன்வைத்திருந்தார். அது இலங்கைக்கு உள்ளக ரீதியில் எச்சரிக்கையாகவும் நெருக்கடியானதாகவும் இருந்தது. இந்த இரட்டைத் தூண் கோட்பாடு என்றால் என்ன? அதாவது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொருளியல் நலன்களின் அடிப்படையில் ஒருதூண் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவது. இரண்டாவது தூண் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இந்திய அனுசரணையுடனான நியாயமான நிரந்தர தீர்வு. இந்த இரண்டு அம்சங்களையும் தூண்களாகக் கொண்ட கொள்கைதான் இரட்டைத் தூண் கோட்பாடு. இந்த இரட்டைத் தூண் கோட்பாட்டின் இரண்டாவது தூணாகிய இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுக்கு மூன்றாம் தரப்பின் உடைய அனுசரணையையோ தலையீட்டையோ இலங்கை விரும்பவில்லை. இதில் மூன்றாம் தரப்பாக இந்தியாவின் தலையீட்டைச் சிங்கள-பௌத்த பேரினவாத அரசியல் ஒருபோதும் அனுமதிக்கத் தயாரில்லை என்பது வெளிப்படை. எனவே இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இரட்டைத் தூண் கொள்கையின் ஒரு பகுதியாகிய இரண்டாவது துணை எவ்வாறு நிராகரிக்கலாம் என்பதற்கான தருணத்திற்காகச் சிங்கள ஆட்சியாளர் காத்திருந்தனர். அந்தக் காத்திருப்புக் கொழும்பு மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கியதன் மூலம் அடைந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கொழும்பு துறைமுக மேற்கு முனையம் வழங்கப்பட்டதன் பின்னர் இந்தியாவிற்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட இந்தியாவின் இந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இலங்கைத் தமிழர் இனப் பிரச்சினைக்கான தீர்வாக ""உள்நாட்டு யதார்த்தத்தின் அடிப்படையிலான தீர்வு (Home ground solution)"" என்ற தீர்வு முன்னெடுக்கப்படும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பு தலையீட்டை அல்லது அனுசரணையை அதாவது இந்திய வெளியுறவு அமைச்சரின் இரட்டைத்துாண் கொள்கையை நிராகரித்திருக்கிறார் என்பதே உண்மையாகும். அவ்வாறுதான் அரசியலில் அர்த்தப்பட வேண்டும். இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியா தலையிட முடியாது என்பதனை வலியுறுத்துவதாகவும் இது அமைந்துள்ளது. இன்று இலங்கை அரசியல் சக்கரம் தமிழ் பேசும் மக்களின் இரத்தத்தினை ஒயிலாகப் பயன்படுத்திச் சுழன்று கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்கள் மேற்கொள்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து கடந்த நூறு ஆண்டுகளில் சிங்கள இராஜதந்திர தோற்கடித்து வருகிறது. அத்தோடு இலங்கைத் தமிழரைப் பயன்படுத்தியே புவிசார் அரசியலில் இந்தியாவையும் தொடர்ந்து தோற்கடித்து வருகிறது. இதனை வரலாற்று ரீதியில் பார்ப்போம். இலங்கை சுதந்திரத்திற்கு முன்னான 1942ல் இருந்து இந்தியாவின் பெருந்தலைவர் நேருவுடன் இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கத் தாம் விரும்புவதாக டி.எஸ்.சேனநாயக்கவும், ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் ஆசைவார்த்தை காட்டி பாசாங்கு அரசியல் செய்தனர். இந்தப் பாசாங்கு என்பது பிரித்தானியருடன் பேரம் பேசுவதற்கான தமது சக்தியை அதிகரிப்பதற்காகவே மேற்கொண்டனர் என்பதனை நேருவோ அல்லது அன்றைய கால இந்தியத் தலைவர்களோ சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் 1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரித்தானியா-இலங்கைக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து இந்தியாவைக் கைவிட்டு, ஏமாற்றித் தோற்கடித்தனர். அவ்வாறுதான் சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தில் ஜி.ஜி.பொன்னம்பலத்தை டி.எஸ். சேனநாயக்க தனது அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவியைக் கொடுத்து அவரை பயன்படுத்தியே அவரைக் கபிநெற் அமைச்சராக வைத்துக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் பட்டிப்பளை ஆற்றை கல்லோயா எனச் சிங்கள பெயரிட்டு சிங்களக் குடியேற்றத்தை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தை இரண்டாகத் துண்டாடினார். இதன் மூலம் தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியைச் சிதைப்பதில் வெற்றிகண்டனர். அதே ஐக்கிய தேசியக் கட்சி 1955ல் களனி மகாநாட்டில் அரச மொழியாகச் சிங்கள மொழியைக் கொண்டு வரவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். 1956ல் ஆட்சிக்கு வந்த சுதந்திர கட்சி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தனிச்சிங்கள மொழிச் சட்டத்தை நிறைவேற்றியது. இதிலிருந்து சிங்கள ஆளும் வர்க்கம் எதுவாயினும் அவர்கள் எப்போதும் தமிழர்களை ஒடுக்குவதில் போட்டி போட்டுச் செயற்பட்டனர் என்பதற்கு நல்ல உதாரணம். அடுத்து ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வை நோக்கி தந்தை செல்வா பண்டாரநாயக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட ""பண்டா-செல்வா ஒப்பந்தம்"" அதனை அடுத்து ""டட்லி -செல்வா ஒப்பந்தம்"" சிங்கள ஆளும் வர்க்கத்தினால் கிழித்தெறியப்பட்டது தான் வரலாறாகியது. முதலில் பொன்னம்பலம் காலம் ஒற்றையாட்சிக் கொள்கையையே கொண்டதாயிருந்தது. இதற்குப் பின்னர்தான் தமிழர் தரப்பு ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுக்குத் தீர்வு கிடையாது என்ற நிலைப்பாட்டை எடுத்து தந்தை செல்வாவினால் சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சமஷ்டிக் கோரிக்கை நிராகரிப்பின் பின்னர்தான் தனிநாட்டுக்கான கோரிக்கையும் போராட்டமும் எழுந்தது. 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரைக்கும் தமிழர்கள் உள்ளக தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அதில் நம்பிக்கையும் கொண்டிருந்தனர். ஆனால் சிங்களத் தலைவர்கள். தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். அதுமட்டுமல்ல இந்தக் காலப் பகுதியில் தொடர்ச்சியாக இந்தியாவுடன் மலையகத் தமிழரை வெளியேற்றுவதற்கான பல ஒப்பந்தங்களை மேற்கொண்டு இறுதியில் ""ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்"" மூலம் தமிழ் பேசும் மக்களை இந்தியாவிற்கு நாடு கடத்தினர். இதன் மூலம் இந்தியாவை ஏமாற்றினார். இந்த ஏமாற்றத்தை 1982ல் உணர்ந்து கொண்ட இந்திரா காந்தி அம்மையார் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். இதனையடுத்து 1983ம் ஆண்டு ஜூலை இனப்படுகொலையும் அதனைத் தொடர்ந்து 84 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏ.ஆர்.ஜெயவர்த்தனா கூட்டிய சர்வ கட்சி மகாநாடும் தோல்வியில் முடிவடைந்தது. இது இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வினை இலங்கைத் தீவுக்குள் எட்ட முடியாது என்பதனை வெளிப்படுத்தியது. இந்தப் பின்னணியில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வாகத் தனி நாட்டை நிறுவுவதற்கான ஆயுதப் போராட்டம் பெருவளர்ச்சி கண்டது. இந்தப் பின்னணியில் தமிழர் பிரச்சினையை இலங்கை நாடாளுமன்றத்தில் அல்லது இலங்கையின் அரசியல் எல்லைக்குள் வைத்துத் தீர்க்கப்பட முடியாது. இதனாலேதான் மூன்றாம் தரப்பான இந்தியாவின் அனுசரணையுடன் பூட்டானின் தலைநகரான திம்புவில் முதலாவது பேச்சுவார்த்தை இடம்பெற்றது. திம்புப் பேச்சுவார்த்தை உடன் இலங்கைத் தீவுக்குள் இனப்பிரச்சினை தீர்க்கப்பட முடியாது என்பதுவும் அது சர்வதேச தலையீட்டுடனேயே தீர்க்கப்பட வேண்டும் என்பதுவும் வெளிப்படுத்தப்பட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சினையின் அடுத்த கட்டமாக 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடன் இந்தியாவின் நேரடித் தலையீட்டுடன் ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்டது. ஜெயவர்த்தனாவின் தந்திரத்தினால் மூன்றாம் தரப்பான இந்தியாவையும், தமிழர்களையும் மோதவிட்டதன் மூலம் சிங்கள இராஜதந்திரம் ஒரே கல்லில் இரண்டு எதிரிகளையும் வீழ்த்தி வெற்றி கொண்டது. 1990ஆம் ஆண்டு மீண்டும் உள்நாட்டுக்குள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிரேமதாசா- புலிகள் பேச்சு வார்த்தையும், அதன் பின்னர் 1994-ம் ஆண்டு சந்திரிகா-புலிகள் பேச்சுவார்த்தையும் இடம்பெற்று எந்தப் பயனையும் எட்ட முடியவில்லை. இந்த பின்னணியில் ஆயுதப் போராட்டத்தின் உச்சக் கட்ட வளர்ச்சியில் 2001ஆம் ஆண்டு மீண்டும் வெளிநாட்டுத் தலையீட்டுடன், நோர்வேயின் அனுசரணையுடன் ரணில்-பிரபா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன் பின்னான 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் ஆயுதப்போராட்ட மௌனத்தின் பின்னர் உள்ளக தீர்வு என்ற நிலைக்கு மீண்டும் தமிழர் பிரச்சனை தள்ளப்பட்டது. 2015ல் இந்தியா உள்ளிட்ட மேற்குலக அனுசரணையுடன் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பட்டுத் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சியில் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் என்பது இலங்கைத் தமிழர்களுக்கான பிரச்சினையையோ, அல்லது பிராந்திய பாதுகாப்பிற்கான எந்த தீர்வுத் திட்டத்தையோ முன் வைக்கவில்லை. மேற்குலக அணியை எதிர்பார்த்து செயற்பட்டு சிங்கள ராஜதந்திர கட்டமைப்பு அனைத்துத் தரப்பினரையும் இலகுவாக ஏமாற்றிவிட்டது. இந்தக் காலப் பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடக் குத்தகைக்குச் சீனாவுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான செயற்பாட்டையே அது முன்னெடுத்தது. இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் ஈழத் தமிழர்களுக்கு எந்த நலனும் கிடைக்கவில்லை. அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. தீர்வுத் திட்டம் எதுவும் முன்வைக்கப்படவுமில்லை. மாறாக இனப்படுகொலை செய்த இராணுவத் தளபதிக்கு பீல்ட் மார்ஷல் பட்டத்தை வழங்கி இனப்படுகொலையை அங்கீகரித்தது. அது மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியில் எழுந்த போர்க்குற்றம், மனிதக் குலத்துக்கு எதிரான குற்றம் என்பவற்றை மூடி மறைக்கவும், மறுக்கவும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தைச் சிங்கள ராஜதந்திரம் பயன்படுத்தியது. இந்தப் பின்னணியில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் வருகையும் இலங்கைக்குள் சீனாவின் அடிக்கட்டுமான அபிவிருத்தி என்பதன் ஊடான சீன ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. இப்பின்னணியில் புவிசார் அரசியலில் இந்தியாவினுடைய பிராந்திய பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. இந்நிலையில் இந்திய-இலங்கை உறவில் ஏற்பட்டிருக்கும் கொதிநிலையைத் தணிப்பதற்காக மிட்டாய் கொடுத்து குழந்தைப் பிள்ளைகளை ஏமாற்றுவது போலக் கொழும்பு துறைமுக மேற்கு முனையை இந்தியாவுக்கு வழங்கி இந்தியாவைச் சாந்தப்படுத்துவதில் சிங்கள ராஜதந்திரம் வெற்றி பெற்றுள்ளது. இதில் பலியாடு தமிழரேஎன குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?