முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b429

திலீபண்ணையின் கனவும்…யாழ் கோட்டை முகாம் தகர்ப்பும்.!
-ஈழத்து துரோணர்.!! தமிழர் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத நாள். எமது விடுதலைப்போராட்டமானது ஒவ்வொரு போராளியின் தியாகத்தாலுமே கட்டியெழுப்பப்பட்டது. ஒவ்வொரு போராளியின் தியாகங்களுக்கு பின்னாலும் ஒரு பெரும் வரலாறும், ஈகமும் உள்ளது. அதில் தற்கொடைப்போராளிகள் தொடங்கி திலீபண்ணை வரை, தமிழர் வரலாற்றை அழுத்தி பதிவு செய்து சென்றுள்ளனர். தீலிபண்ணையின் வரலாற்றையோ அல்லது அவரது தியாகத்தை பற்றியோ நான் இந்தப்பதிவில் வெளிப்படுத்த அவசியம் இல்லை என்றே நம்புகின்றேன். அவருக்கான வரலாற்றை ஏலவே புலிகள் வெளிப்படுத்தி விட்டனர். திலீபண்ணையின் ஈகம் நிகழ்ந்த நேரம் நான் சிறிய வகுப்பில் கல்விகற்ற மாணவன். அந்த நேரத்தில் அவரது உண்ணாவிரத அமைவிடத்திற்கு வாகன ஒழுங்குகள் கிராமம், கிராமமாக செய்யப்பட்டிருந்தது. கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அங்கு சென்று மேடைக்கு அருகாமையிலேயே சுற்றி வருவேன். அவரது ஈகமே எம் மனதில் போராட்ட விதையை விதைத்ததென்றால் மிகையாகாது. புலிகளை பயங்கரவாதிகளாகவும், ஆயுத மோகம் கொண்டவர்களாகவும் குறிப்பாக சிங்கள, இந்திய அரசுகளின் பொய்ப்பிரச்சாரம், அந்த நேரத்தில் வானை எட்டியிருந்தது. சம காலத்தில் தான் மாற்றுக்குழுக்களையும் புலிகள் தடை செய்திருந்தமையால், மக்கள் மனங்களில் புலிகள் மேலான கசப்புணர்வை வளர்ப்பதற்கு, இரு அரசுகளும் போட்டி போட்டு செயல்பட்டனர். இந்த இரு அரசுகளும் எம் மக்கள் மனங்களைக் கணிப்பிடத்தவறியிருந்தன. புலிகள் மீதான இந்திய இராணுவ அழுத்தங்கள், சிங்கள அரசுக்கு சார்பாக மிகக் கடினமான முறையில் புலிகளுக்கெதிராக இருந்தது. புலிகள் எதற்காக ஆயுதம் ஏந்தி போராடினார்களோ, அந்தக்காரணிகளை, “இந்திய அரசின் துணையுடன்” சிங்கள அரசு நிறைவேற்ற ஆரம்பித்திருந்தது. இதன் வெளிப்பாடு, தலைவர் இறுக்கமான முடிவொன்றை எடுப்பதற்கு ஆயத்தமான போது, திலீபண்ணையால் தலைவரிடம் “வலிந்து” ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது உலகுக்கு அகிம்சையை போதித்த நாடு இந்தியா. நாங்கள் அகிம்சா வாதிகள் என்ற அடையாளத்துடன் அல்லது முகமூடியுடன் சர்வதேசத்தில் உலா வரும் இந்தியத்தின் கோரமுகத்தை உலகுக்கு காட்டுவதற்கு திலீபண்ணை தயாரானார். இதற்கான அனுமதியை தலைவரிடம் திலீபண்ணையே கேட்டிருந்தார். தான் ஒரு அரசியல் போராளி என்பதால் அந்தக்கடமை தனக்கிருப்பதாகக்கூறித் தனக்கான சந்தர்ப்பத்தை தலைவரிடம் கேட்டிருந்தார். திலீபண்ணையின் கோரிக்கையை ஏற்று சம்மதித்த போதும், இந்திய அரசின் மீதான நம்பிக்கை தலைவருக்கு மட்டுமல்ல, திலீபண்ணைக்கும் இருக்கவில்லை. (தலைவருடனிருந்த சந்தர்ப்பங்களில் இந்தக்கருத்தை செவிமடுத்துள்ளேன்) ஆனபோதும் இந்திய அரசின் “தமிழர்கள் மீதான போலிக்கருணையை” எம் மக்களுக்கும், உலகத்திற்கும் காட்டவேண்டிய கடப்பாடு புலிகளுக்கு இருந்தது. அதனாலேயே அவர்களுக்கு புரிந்த அகிம்சையையே திலீபண்ணை கையில் எடுத்தார். இந்தப் பட்டினிப் போராட்டத்தின் மூலம் “நீர் கூட அருந்தாது” தியாகத்தின் மிக உச்சத்தை தொட்டு புலிகளின் தேசப்பற்றையும், அதன் மீதான உறுதிப்பட்டையும், கொள்கையும் ஆணித்தரமாக, இந்தியத்தின் முகத்தில் அறைந்து, இந்தியத்தின் அகிம்சை என்ற முகத்திரையை கிழித்து, அதன் “நிஜமான கோரமுகத்தை” அம்பலப்படுத்தி வரலாற்றில் புதுப்பக்கத்தை எழுதி, எமக்காக தன்னை உருக்கி திலீபண்ணை ஈகம் எய்தினார்.! திலீபண்ணையின் பிரதான ஆசைகள் இரண்டு இருந்தது. ஒன்று மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும். இரண்டாவது யாழ் கோட்டையில் புலிக்கொடி பரக்கவேண்டும் என்பதுவேயாகும். உண்மையில் முதலாவது ஆசை நிறைவேறியதா என்பது கேள்விக்குரியதேயாகும்.? ஆனால், இரண்டாவது ஆசையை அவரது நண்பர்கள் 1990ம் ஆண்டு நிறைவேற்றியிருந்தார்கள். 1990ம் ஆண்டு இந்திய இராணுவம் வெளியேற்றப்பட்டு இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான பின், சிங்கள இராணுவத்தின் முகாம்கள் அனைத்தும் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டு காவலரண்கள் அமைக்கப்பட்டு, சிங்களத்தின் தரைதொடர்பை துண்டித்திருந்தனர் புலிகள். புலிகளின் முற்றுகையில் இருந்த முகாம்களில் வித்தியாசமானது யாழ் கோட்டை முகாம். ஏனெனில் போரியல் ரீதியாக அந்த முகாம் எதிரிக்கே சாதகமானது. யாழ் கோட்டை சுவர்கள் தரை மட்டத்திலிருந்து 60-70அடிகள் உயரத்தில் இருந்தமையால் குறிபாத்துச் (சினைப்பர் தாக்குதல்) சுடுவதற்கு எதிரிக்கு இலகுவாக இருந்தது. இதில் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடைப்பட்ட தூரம் மிகக்குறைவாக இருந்த முகாமும் கோட்டை தான். அதனால் புலிகள் நிலையெடுத்திருந்த நூலகம், வீரசிங்கம் மண்டபம், கொமிக்கேசன் கட்டிடம், பழைய போலிஸ்ட்ரேஷன் என்பன சாக்குகளைக் கொண்டு மறப்புக்கட்டப்பட்டு பெரும் பாலும் மூவிங்பங்கர் ஊடாகவே போராளிகளின் பயணமிருக்கும். தலைக்கருப்பு எதிரிக்கு தெரிந்தாலே தாக்குதலுக்கு இலக்காகவேண்டிய அபாயம் இருந்தது. இதில் சில போராளிகளை நாம் இழந்திருந்தோம். சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் கோட்டையை கைப்பற்ற சில முயற்சிகள், புலிகளால் மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. அது,எமக்கு மரபுப் போரியல் ரீதியாக பட்டறிவுக்காலம் என்பதால், பிழைகளிலிருந்தே நாம் பாடங்களைக்கற்றோம்.! இந்தப் பின்னடைவுகளுக்கு பிரதான காரணம் கோட்டையின் உள்பரப்பின் தகவல் எம்மிடம் இருக்கவில்லை. அதனால் அதுபற்றிய தகவலை அப்போதைய, புலிகளின் யாழ்மாவட்ட சிறப்புத்தளபதி பாணு அண்ணையால் திரட்டப்பட்டது. அதில் கோட்டையில் சிங்கள இராணுவத்திடம் கைதியாகவிருந்து விடுதலையான நபர்களிடம் உள்ளமைப்பு பற்றி கேட்டறிந்தனர். ஆனபோதும் மதில் சுவர் பற்றிய தகவலோ அல்லது கொத்தளங்கள் பற்றிய தகவலோ புலிகளுக்கு கிடைக்கவில்லை. யாழ் கோட்டை என்பது ஒரு நட்சத்திர வடிவத்தைக்கொண்டது. இதில் ஐந்து முனைகளிலும் ஏறத்தாழ 50m நீள, அகலத்தைக் கொண்ட கொத்தளங்களும் ஒரு வாகனம் சென்று வரக்கூடிய அகலத்தில் மதில் சுவரையும் கொண்டிருந்தது. இந்தக் கோட்டையை பாதுகாப்பதற்கு கோட்டையை சுற்றி 50m அகலத்தில் சகதியைக் கொண்ட அகழியும், அதற்கு முன்னாள் மேலதிக பாதுகாப்பிற்கு ஐந்து சிறு கோட்டையும் உள்ளது. இதிலிருந்து சண்டையிடும் வீரர்கள், தங்களால் முடியாது போனால், பெரும் கோட்டைக்கு பின் வாங்குவர். அந்த நேரத்தில் புலிகளுக்கு கிடைத்த தகவலை வைத்து கோட்டை முகாம் மீதான தாக்குதல் திட்டம் பாணு அண்ணையால் போடப்பட்டது. அதில் அகழியைக்கடப்பதற்கு பெரிய ரெஜிபோம்களையும், சுவரில் ஏறுவதற்கு பெரும் ஏணிகளும் தயாரிக்கப்பட்டது. அதன் படி 18/09/1990 பெரும் தாக்குதலொன்று மேற்கொண்டு கோட்டையை கைப்பற்றி, திலீபண்ணியின் நினைவுநாளில் கொடியேற்றுவதே புலிகளின் திட்டம். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் எமக்கு கிடைத்த தகவலின்படி அகழியினுள் கால்வைத்தால் நாம் புதைந்து விடுவோம் என்ற எச்சரிக்கையும் எமக்கு சிலரால் வழங்கப்பட்டிருந்தது. இவைகளை கருத்தெடுத்தே ரெஜிபோமில் அகழியைக்கடக்க ஆயத்தம் செய்தனர் புலிகள். ஆனால் அது உண்மையல்ல.! அந்த அகழிகள் தோண்டி பலநூறு ஆண்டுகள் கடந்தமையால் சகதிகள் இறுகிவிட்டிருந்தது. முனியப்பர் கோவிலடிக்கு அருகாமையில் இருந்து முத்தவெளி பின்பக்கம் மட்டும் இரு காலையும் பக்கத்தில் வைத்தால் எடுப்பதற்கு சிரமம்.! எட்டி நடந்தால் அகழி ஊடாக கோட்டையை சுற்றி வரமுடியும். இந்த முகாம் தாக்குதலில் புலிகளுக்கு சாதகமாக இருந்த ஒரு விடையம் எதிரிக்கான உணவும் நீரும், துப்பாக்கி ரவைகளும் வான்வெளி மூலமாகவே கோட்டையினுள் எதிரியால் போடப்பட்டது. இதில் பெரும்பாலும் இந்த உணவுப்பொருட்கள் எதிரிக்கும், புலிகளுக்கும் இடைப்பட்ட வெளிகளிலேயே விழுவதுண்டு. அந்த உணவுகளில் பேரிச்சம்பழம், அதில் செய்த கேக், கண்டோஸ் (சொக்லேட்), பிஸ்கட் என்பன பிரதான உணவாக இருக்கும். இந்த உணவுகளை இரவோடு, இரவாக நிலத்தோடு, நிலமாக ஊந்து சென்று எடுத்து வருவர் போராளிகள். அன்றைய நேரத்தில் ஆண், பெண் போராளிகளுக்கு மத்தியில் பெரும் போட்டியே நடக்கும் இதை யார் முதலில் எடுப்பதென்று. எதிரியின் இடைவிடாத பரா வெளிச்சங்களுக்கு மத்தியில் இவைகளை எடுத்து வருவதென்பது ஒன்றும் இலகுவான காரியமில்லை. உணவெடுப்பதில் அந்த நேரத்தில் பெயர் பெற்றவர்கள் லெப்.சங்கீதா(18/09/1990 ம் திகதி கோட்டை தாக்குதலில் வீரச்சாவடைந்தார்) 2ம் லெப். மீனகுமாரி மற்றும் கப்டன்.கோணேஸ் ஆகியோராவர். குறிப்பிட்ட திகதியில் திட்டமிட்டபடி கோட்டை முகாம் மீது புலிகளின் “பசீலன்2000” மோட்டர் மூலம் எல்லா முனைகளிலிருந்தும் இடைவிடாது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு எறிகணையும் அண்ணளவாக 40-50 KG நிறையுடையதென்பதால், வெடிக்கும் போது பெரும் சத்தத்துடன் கூடிய அதிர்வை உண்டாக்கும். சிறிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருந்த எதிரிக்கு தொடர்ந்து வெடிக்கும் எறிகணையின் சத்தம் காதைப்பிளந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு வெடிகுண்டு நிரப்பப்பட்ட லொறி ஒன்றை பண்ணை வீதியால் ஓட்டிச்சென்ற போராளியொருவர் அதை வெடிக்க வைத்தார். ஆனால், புலிகள் எதிர் பாத்த சேதத்தை அது கொடுக்கவில்லை. (அந்தப்போராளி மேஜர். பவா என்று நினைக்கின்றேன். இது நடந்து 27வருடங்கள் என்பதால் எனக்குள் ஒரு நினைவுத் தடுமாற்றம் உள்ளது) அதனைத்தொடந்து முன்னேறிய புலிகளும் தாக்குதலைத் தொடுத்தனர். அந்த முயற்சி எமக்கு கைகூடவில்லை. அதனால் பாணு அண்ணை, பசீலன் தாக்குதலை அதிகப்படுத்தி எதிரியை நிலைகுலைய வைத்தனர். அதன் எதிரொலி, பண்ணை வீதிக்கு பின் வீதியில்( கோட்டைக்கு அருகாமையில் உள்ள கரை வீதி) அமைந்திருந்த கழிவு வாசல் ஊடாக எதிரி நீரேரி ஊடாக தப்பிச்சென்றிருந்தான். இந்த வாசல் பற்றி ஏலவே அறிந்திருந்த புலிகள் அதன் மூலம் எதிரி தப்பி செல்வதை தடுப்பதற்கு, தோணி ஒன்றில் மண் மூட்டைகளை அடுக்கி அதில் கப்டன்.கோபாலி என்ற போராளியின் தலைமையில் காவலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், அன்று அலைகளின் வீச்சு அதிகமாக இருந்தமையால் அவர்கள் அந்தக் காவலுக்கு செல்லவில்லை. அதை சாதகமாக பயன்படுத்திய எதிரி தப்பிச்சென்றிருந்தான். இதை அறியாத புலிகளுக்கு எந்தவித வேட்டொலியும் இல்லாத பொழுதாக அன்று விடிந்திருந்தது. இதைக் கருத்திலெடுத்த கப்டன். கோணேஸ் தனது கையை வெளியில் நீட்டினான். எதிரியின் தாக்குதலை எதிர்பாத்த போராளிகள் அது நிகழாமையால் கோணேசே முதலில் வெளியில் பதுங்கிப் பதுங்கி முகாம் வாசலுக்கு சென்றான். அங்கு ஒரு வாரத்துக்கு முன் நடந்த தாக்குதல் முயற்சியின் போது கைப்பற்ற முடியாது விடுபட்டிருந்த லெப்.சங்கீதா உட்பட எமது போராளிகள் ஆறுபேரின் உடல்களை எமது காவலரனுக்கு கொண்டு வந்து சேர்த்தான். (இந்தத் தாக்குதலில் தான் ஜவான் அண்ணைக்கு காலில் காயமேற்பட்டதென்று நினைக்கின்றேன்) தொடந்து கோட்டையினுள் முன்னேறிய கோணேசின் அணி எதிரி பின்வாங்கியதை உறுதிப்படுத்தியது. அதன்படி திலீபண்ணையின் ஈகைசாவடைந்த நாளான அன்றே, அதே நேரத்தில் கோட்டையில் கொடியினை பாணு அண்ணை ஏற்றினார். ஒல்லாந்தர், போத்துக்கேயர், ஆங்கிலேயர், இந்தியர், சிங்களர் எனப் பல நூற்றாண்டுகளாக, ஆக்கிரமிப்பு சின்னமாகவிருந்த யாழ் கோட்டை முதல்முறையாக தமிழர் கைகளுக்கு வந்தது. மீண்டும் கோட்டை எதிரி கைக்கு போகக்கூடாதென்பதற்காக, பண்ணை வீதிப்பக்கமிருந்த கோட்டைச் சுவர்கள் இடிக்கப்பட்டது. ஆக, அன்று திலீபண்ணையின் கனவை புலிகள் நிறைவேற்றினர். மக்களாகிய நீங்கள் அவரது கனவை சுமக்கிண்றீர்களா என்பதை உங்கள் எண்ணத்துக்கே விட்டு விடுகின்றேன்.! நினைவுகளுடன் துரோணர்.!!

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?