பிணையில் விடுவிக்கப்பட்ட பல்கலை மாணவர்கள் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரை காணிகளை சிங்கள மக்கள் அபகரிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பிணையாளிகளின் வதிவிட உறுதிப்படுத்தல் தாமதமாகியதால் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து இன்று(5) காலை மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
வதிவிட உறுதிப்படுத்தல் தாமதம்
இன்று காலை முறக்கொட்டாஞ்சேனை மாரியம்மன் ஆலய முன்றிலிலிருந்து பேரணியொன்றை ஆரம்பித்த மாணவர்கள் சித்தாண்டியில் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் நடைபெறும் இடம்வரையில் சென்று அங்கு கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தமது பேருந்தில்ல் திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களை வந்தாறுமூலை, களுவன்கேணி பகுதியில் இடைமறித்த சந்திவெளி காவல்துறையினர் அவர்களில் ஆறு பேரை கைதுசெய்தனர்.
இவர்கள் இன்று மாலை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சட்ட விரோதமாக ஒன்றுகூடியமை, பெருந்தெருக்கள் சட்டத்தின் கீழ் சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் மாணவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சரீர பிணை
இதன்போது மாணவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான ஜெகன், கமலதாஸ், ரமனா, சதுர்திகா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இது தொடர்பில் ஆராய்ந்த நீதிபதி குறித்த மாணவர்களை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்தார். குறித்த வழக்கானது எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிணையெடுப்பவர்கள் தமது இருப்பிடத்தினை கிராம சேவையாளர் உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், குறித்த உறுதிப்படுத்தலை பெறுவதற்கான நேரம் நீடித்த காரணத்தினால் குறித்த ஆறு மாணவர்களும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்