முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 397

 ஏ.கே. 47ஐ நான் ஏன் கண்டுபிடித்தேன்? வேதனையடைந்த மிக்கைல் கலஷ்னிகோவ்!

ஏ.கே.47 ரக துப்பாக்கியைக் கண்டுபிடித்த ரஷ்யாவின் மிக்கைல் கலஷ்னிகோவ் தனது 94 ஆவது வயதில் 23.12.2013 திங்கட்கிழமை காலமானார். மூன்றாம் உலக நாடுகளின் மரபுவழி இராணுவங்கள் முதல் உலகிலுள்ள அனைத்து விடுதலை இயக்கங்கள் வரை பொதுத் தாக்குதல் ஆயுதமாக பயன்படுத்திய ஏ.கே.47 என்ற பெயரால் உலகம் முழுவதும் அறியப்பட்ட தானியங்கி துப்பாக்கியின் உருவாக்குனரும் தயாரிப்பாளருமான மிக்கைல் கலஷ்னிகோவ், நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கடந்த ஒரு மாத காலமாக உடலினுள் குருதிப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் ரஷ்யாவிலுள்ள அவரது சொந்த ஊரான இஷிவ்ஸ்க் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார்.


மிக்கைல் கலஷ்னிகோவ் 1919 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி மேற்கு சைபீரியாவில் “குர்யா” எனும் கிராமத்தில் வறிய விவசாயக் குடும்பமொன்றில் டிமோபி அலெக்ஸான்ரோவிக் கலஷ்னிகோவ், ஃபிரோலோனா கவேரினா தம்பதியினருக்கு 19 பிள்ளைகளில் ஒருவராக 17 ஆவது பிள்ளையாக ரஷ்யாவில் பிறந்தார்.


மிக்கைல் கலஷ்னிகோவ் , எகடீரினா விக்டோரோனா தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள் ஆகும். ஒரு ஆண் பிள்ளையும், மூன்று பெண் பிள்ளைகளுமாகும். ஆண் பிள்ளையான விக்டர் சிறிய ரக துப்பாக்கி வடிவமைப்பாளர் ஆவார். நெல்லி, எலினா, நடால்யா ஆகியோர் பெண் பிள்ளைகளாவர்.


மிக்கைல் கலஷ்னிகோவ் 1938 இல் செஞ்சேனை படைப்பிரிவில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டார். அங்கே பீரங்கி ஓட்டுநரும் திருத்துநருமாக பணியமர்த்தப்பட்டார். விரைவிலேயே டி-34 பீரங்கி படைக்கலனின் ஸ்டிரேயிலுள்ள 24 ஆவது பிரிவுக்கு புரோடித் தாக்குதலில்


ரஷ்யப் படைகள் பின்வாங்குவதற்கு முன் மாற்றப்பட்டார். குறிப்பிடத்தக்க பின்னடைவான நாசிப் படைகளுக்கு எதிரான பிரயன்ஸக் தாக்குதலில் ரஷ்யப்படைகள் மிகவும் மோசமான நிலையில் பின் வாங்கின. இந்தத் தாக்குதலே ஏ.கே.47 உருவாகக் காரணமாயிருந்தது.


இந்தப் போருக்குப் பின் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மிக்கைல் கலஷ்னிகோவ் ஆறு மாத காலம் ஓய்விலிருக்கும் நிலை ஏற்பட்டது. கலஷ்னிகோவ் மருத்துவமனையில் இருக்கும் சமயத்தில் பல வீரர்கள் படையில் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் செயற்பாடுகள் குறித்து புகார் தெரிவித்ததை அறிந்தார். ரஷ்யப் படைகளிடம் உறுதியான, செயல்திறன் கொண்ட துப்பாக்கிகள் இல்லாத நிலைக்கு ரஷ்யப்படைகள் தள்ளப்பட்டதை உணர்ந்து இயந்திரத் துப்பாக்கி வடிவமைக்க எண்ணம் கொண்டார். உடல் நலிவடைந்த நிலையில் இருந்தும் கூட இதில் உறுதியாக இருந்தார். இதனிடையே இவர் உருவாக்கிய முதல் இயந்திரத் துப்பாக்கி இராணுவத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் இவரின் முயற்சியை இராணுவம் கண்காணித்தது.


1942 முதல் கலஷ்னிகோவ் செஞ்சேனை படைப்பிரிவின் தலைமையகத்திற்காக துப்பாக்கிகளை வடிவமைக்கும் பிரிவில் உதவி புரிந்து கொண்டிருந்தார். 1944 இல் வாயுவினால் செயற்படக்கூடிய புதிய ரக சிறிய துப்பாக்கியை, அப்போது பயன்படுத்தப்பட்டு வந்த துப்பாக்கியின் முன்மாதிரியை வைத்து உருவாக்க ஆரம்பித்து 1946 இல் தாக்குதல் துப்பாக்கிகளை வடிவமைக்கும் நிலைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார்.


அவர் உருவாக்கிய மூலம் பல துப்பாக்கிகளை வடிவமைக்கும் முன்மாதிரியை உருவாக்கியது.. தனது முயற்சியைக் கைவிடாத அவர் தன்னுடைய தேடல் மற்றும் அனுபவம் என்பவற்றை வைத்து, உச்ச நிலையாக தொடர்ந்து இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 1945ஆம் ஆண்டு முதல் ஏ.கே. 47 துப்பாக்கியை உருவாக்க ஆரம்பித்தார். 1947ஆம் ஆண்டு சோவியத் படைகளினால் பரீட்சார்த்தமாக பயன்படுத்தப்பட்டு பல சோதனைகள், பரீட்சார்த்த பாவனையின் பின்னர் 1949 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் இராணுவத்தினால் ஏ.கே. 47 துப்பாக்கி உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆயுத செயற்பாட்டில் மாபெரும் பாய்ச்சலையும் புரட்சியையும் ஏற்படுத்தினார்.


ஏ.கே.47 என்பதன் விரிவாக்கம் “அவ்தோமத் கலஷ்னிகோவா 47” என்பதாகும். 1947 ஆம் ஆண்டு இது கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு 47 என பெயரிடப்பட்டது. அதனால் பின்னர் ஏ.கே. 47 ரக துப்பாக்கி சர்வதேச அளவில் பிரபல்யம் அடைந்தது. இதன்பின் கலஷ்னிகோவ் மிகவும் பிரபல்யமாக சர்வதேச அளவில் பேசப்பட்டார். சோவியத் செம்படையில் மட்டுமல்லாமல் அதன் நேச நாட்டு படைகள் மற்றும் விடுதலை இயக்கங்கள் என அனைவரும் பயன்படுத்தும் அளவுக்கு ஏ.கே.47 தானியங்கி துப்பாக்கி புகழ்பெற்றதுடன் சேர்த்து அவருடைய கலஷ்னிகோவ் என்ற பெயரும் உலகளவில் பிரபலமானது.


ஏ.கே.47 ரக தானியங்கி துப்பாக்கி இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்தான் பயன்பாட்டிற்கே வந்தது. அதனால் சோவியத் ரஷ்யாவுக்கு அவ்வளவாகப் பயன்படவில்லை. பிற நாடுகளுக்குத்தான் அதிகமாகப் பயன்பட்டது. இதனை முதன்முதலாக உலகம் கண்டது, 1953 இல் நடைபெற்ற கிழக்கு பெர்லின் கலவரங்களின்போதுதான். சில ஆண்டுகள் கழித்து ஹங்கேரியப் புரட்சியிலும் இது பயன்படுத்தப்பட்டது.


இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பாதிப்பு எதுவுமில்லை. ஆனால் வியட்நாம் போரில் அமெரிக்கா கடுமையான தோல்வியை சந்தித்து பயங்கரமாக அடி வாங்கிக் கட்டிக் கொண்டு புறமுதுகிட்டு ஓடியது. அதற்கு காரணம் கலஷ்னிகோவ் உருவாக்கிய வியத்தகு செயற்பாடுகள் கொண்ட ஏ.கே.47 ரக தானியங்கி துப்பாக்கிகளே ஆகும். (அமெரிக்கத் தயாரிப்பான எம்16 ஆல், ரஷ்யத் தயாரிப்பான வியத்தகு செயற்திறன் கொண்ட ஏ.கே.47 இற்கு ஈடு கொடுக்கமுடியவில்லை.)


உலகின் அதிகளவில் பரந்து காணப்படும் துப்பாக்கி எனும் சாதனையுடன் ஏ.கே. 47 கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. மொஸாம்பிக் நாட்டின் தேசியக் கொடியில் ஏ.கே.47 துப்பாக்கி இடம்பெற்றுள்ளது. கொலம்பிய நாட்டு கலைஞர் சீஸர் லோபஸ் சில ஏ.கே. 47 துப்பாக்கிகளை கிட்டாராக மாற்றி வடிவமைத்தார். இதில் ஒன்று முன்னாள் ஐ.நா. செயலாளர் கோபி அனானுக்கு 2007 இல் பரிசாக வழங்கப்பட்டது. முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுஸைனிடமிருந்து தங்கமுலாமிடப்பட்ட ஏ.கே. 47 ரக துப்பாக்கி அமெரிக்க படைகளால் மீட்கப்பட்டது. வீடியோக்களில் எப்போதும் ஏ.கே. ரக துப்பாக்கியுடன் தோன்றுவார் அல்-கைதாவின் நிறுவுநர் ஒஸாமா பின்லேடன். ஏ.கே. 47 ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டாலும் தற்போது அனுமதிபெற்று சீனா, இஸ்ரேல், இந்தியா, எகிப்து மற்றும் நைஜீரியா உள்ளிட்ட 30 இற்கும் அதிமான நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது. 1981 இல் எகிப்து அதிபர் அன்வர் சதாத் போர் வீரர்களால் கொல்லப்பட்டதும் இந்தத் துப்பாக்கியால்தான். ஈரான், ஈராக் போரிலும் இது பயன்பட்டது.


கலஷ்னிகோவ் இரண்டாம் உலகப் போருக்கு பின் சோவியத் இராணுவத்தின் சிறிய படைக் கலன் பொது வடிவமைப்பாளராக பதவி உயர்வு பெற்றார். இவருடைய புதிய வடிவமைப்புக்கள் 1950 இல் சேர்க்கப்பட்டது. பின்னாளில் குழுத் தானியங்கி படைக்கருவிகள் ஏ.கே.47 க்கும் மேலான ஆர்.பி.கே. (ருக்னோய் பியூல்மியட் கலஷ்னிகோவா) மற்றும் பி.கே. (பியூல்மியட் கலஷ்னிகோவா) வகைத் துப்பாக்கிகளும் வடிவமைக்கப்பட்டன.


அந்த நேரத்தில் ரியுச்சர்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “தன்னுடைய தயாரிப்புகள் தரமுள்ளதாகவும் நல்லவர்களுக்காகவும் நல்ல விடயங்களுக்காகவும் பயன்படவேண்டும் என்று விரும்புகின்றேன்” என கூறியுள்ளார்.


1974 இல் கலஷ்னிகோவ் வடிமைத்த ஏ.கே.74 ரக தானியங்கி துப்பாக்கிகளை 1980 இன் பிற்பகுதியில் ஜேர்மன் நிறுவனம் தனது வணிக சின்னமான குடையும் கத்திகளும் பொறித்து வெளியிட்டது.


1997 ஆம் ஆண்டு ஏ.கே.47 ரக தானியங்கி துப்பாக்கி வடிவமைக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவில் உரையாற்றிய கலஷ்னிகோவ், “நான் என் படைப்புகளுக்காக பெருமையடைகின்றேன். அதேவேளையில் அதை தீவிரவாதிகளும் சமூக விரோதிகளும் அப்பாவி மக்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பயன்படுத்துவதைக் கண்டு வேதனையடைகின்றேன். இதைக் கண்டுபிடித்ததற்குப் பதிலாக விவசாயிகளுக்குப் பயனளிக்கும் விதமாக புல் வெட்டும் இயந்திரங்களை வடிவமைத்திருக்கலாம். அதன் மூலம் விவசாயிகள் வாழ்வும் நாட்டின் வளமும் பெருகியிருக்கும்” என்று வேதனையுடன் பேசினார்.


தனது ஆயுதம் பெருமளவு மக்கள் பலியாவதற்கு காரணமாகவுள்ளமை தொடர்பான குற்றச்சாட்டை ஏற்க மறுத்து வந்த கலஷ்னிகோவ், அவற்றைப் பயன்படுத்தும் நாட்டின் கொள்கைகளே அந்தப் படுகொலைகளுக்கு காரணமென தெரிவித்திருந்தார்.


ஏ.கே.47 ரக துப்பாக்கியால் வருடத்துக்கு சுமார் இரண்டரை இலட்சம் பேர் இறப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. கலஷ்னிகோவ் தனது கண்டுபிடிப்பான ஏ.கே.47 ரக துப்பாக்கியால் இதுவரை ஒருவரைக் கூட கொன்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கலஷ்னிகோவ் இருமுறை “சோஷலிச தொழிலாளர்களின் மாவீரன்” என்ற உன்னத பட்டத்தை பெற்றுள்ளார். தொழில்நுட்ப அறிவியலில் உயர்தர முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சரி இவ்வளவு பெரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளாரே, நிச்சயம் உலகப் பணக்காரர்களின் வரிசையில் இடம்பெற்றிருப்பாரா? என்றால் இல்லை! பத்துக் கோடி ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுக்கு மேல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், கலஷ்னிகோவ் அதற்காக பொருளாதார ரீதியில் எந்த பயனும் அடைந்ததில்லை. அவர் சன்மானமாக பெற்றுக் கொண்டிருந்தது மாநில ஓய்வூதியம் மட்டுமே!கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam Eelam b965

ரஷ்ய - உக்ரைன் போர்! - இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுகள் எதும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் 24ம் திகதி ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து 249 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்தித்து பேசுவுதே சிறந்த வழியென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய இராணுவம் இன்றைய தினம் உக்ரேனிய நகரங்கள் மீது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பல நகரங்கள் மீது குண்டு தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடர்கிறது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பி